தில்லைவிளாகம் ராமர்( THILLAIVILAGAM RAMAR TEMPLE)

தில்லைவிளாகம்

ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில்

“கற்பார் இராமபிரானையல்லால் மற்றுங்கற்பரோ?

புற்பா முதலாப் புல்லெறும்பாதியொன்றின்றியே

நற்பால் அயோத்தியில்வாழும் சராசரம் முற்றவும்

நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே”

                                                              (நம்மாழ்வார் 7/5/1)

காரார் கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு*

ஓராதான் பொன்முடி ஒன்பதோடொன்றையும்*

நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த

எம்பெருமான் இராமன் குடிகொண்ட அற்புத க்ஷேத்திரம் திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகத்தில் உள்ள ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோவில். இன்றேறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன் குளம் வெட்ட தோண்டியபோது பூமியில் ஸ்வயம்புவாய் ஸ்ரீ சீதாதேவி ஸமேத ஸ்ரீ ராமப்பிரானின் 5அடி உயர பஞ்சலோக சிலைகள் கிடைத்தன. மூலவரே பஞ்சலோக விக்ரஹமாய் எழுந்தருளி இருக்கும் க்ஷேத்திரம் இது.

ஸ்தலபுராணம்:

குரைகடலை அடலம்பால் மறுகவெய்து*

குலைகட்டி மறுகரையை அதனாலேறி*

எரிநெடுவேல் அரக்கரொடு இலங்கை வேந்தன்*

இன்னுயிர் கொண்டவன் தம்பிக்கு அரசும் ஈந்து

பின் திரும்பும் வழியிலே

பாரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தை அடைகிறார். முனிவர் அவருக்கு விருந்தளித்து உபசரிக்கிறார். அப்போது 14 ஆண்டு காலம் நிறைவுற்றதால் தமக்காக காத்திருந்து தாம் வராவிட்டால் அக்னியில் வீழ்வேன் என்று பரதன் வைத்த வேண்டுகோள் நினைவில் வர அனுமனை அழைத்து பரதனிடம் தாம் திரும்பும் செய்தியை பரதனுக்கு தெரிவிக்க ஆக்ஞேபிக்கிறார். அவ்வண்ணமே செய்வதாய் அனுமன் சொல்லின் செல்வனாய் கிளம்புகிறார். பரத்வாஜ முனிவர் ஸ்ரீராமனை உபசரித்த இடமே தற்போது தில்லைவிளாகமாக விளங்குகிறது. கால ஓட்டத்தில் அனைத்தும் மறைந்து இது ஒரு சிவஸ்தலமாக விளங்கியது. எம்பெருமான் கண்டெடுக்கப்பட்டபின் சிவன் கோவில் வளாகத்திலேயே எம்பெருமானுக்கு கோவில் எழுப்பப்பட்டது. தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த எம்பெருமானுக்கு பரமசிவனார் தம்மிடத்தினையே தந்ததால் இது தில்லைவளாகம் ஆயிற்று. ஸ்ரீராமபிரானின் கோவில் பக்கத்திலேயே சிவபெருமான் கோவிலும் நடராஜர் சன்னதியும் ஆறுகால பூஜையும் சிறப்பாக நடந்து வருகின்றன.

மூலவர்:.

ஸ்ரீகோதண்டராமன்.  – நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிர தன்னிகரிற் சிலைவளைத்து அன்று இலங்கை பொடி செய்த தடந்தோளன் மகிழ்ந்து இனிதுறை கோவில். கோதண்டத்தையும் இராமசரத்தினையும் தன் கைகளில் கொண்டு முடிவில்லாததோர் எழில் திருமுகத்தனாய் காட்சியளிக்கிறார் ஸ்ரீராமபிரான். காற்றிடைப் பூளை கரந்தென அரந்தையுறக் கடலரக்கர்தம் சேனை கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில்லிராமன் முகத்தில் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தருகிறார். திரிபங்கம் என்று சொல்லப்படும் மூன்று வளைவுகளுடன் கூடிய திருமேனி. திருவிளையாடு திண்தோள், இடுப்பு மற்றும் முழந்தாள் வளைவுகள். திருமார்வில் போரினால் ஏற்பட்ட வடுக்கள், தேமல்கள் மனிதர்களுக்கு உள்ளது போலவே சேவையாகின்றன. கைகளில் விரல்களும் மனிதர்களைப் போலவே நீண்ட தனித்தனி விரல்களுடன், நகங்களுடன் சேவையாகின்றன.

காமாராம ஸ்திரகதலிகா ஸ்தம்ப ஸம்பாவநீயம்

க்ஷௌமாச்லிஷ்டம் கிமபி கமலா பூமி நீளோபதாநம்

ந்யஞ்சத் காஞ்சீ கிரண ருசிரம் நிர்விசத் யூருயுக்மம்

லாவண்யௌக த்வயமிவ மதிர் மாமிகா ரங்கயூந:

ஸ்வாமி வேதாந்த தேசிகன் அரங்கனது தொடையழகை மன்மதனது தோட்டத்தில் செழித்து வளர்ந்த இரண்டு வாழைத்தண்டுகளுக்கு ஒப்பிடுவது போல எழிலார்ந்த தொடைகள். மனிதர்களின் முழந்தாள்களைப்போலவே உருண்டு திரண்ட முழந்தாள்கள். கால்களில் பச்சை நரம்போடுவது சேவையாகிறது. கால்களில் “பாராளும்படர் செல்வம் பரதநம்பிக்கேயருளி ஆராவன்பு இளையவனோடு அருங்கானம் அடையுமும் தாயார் கௌசல்யை கட்டிய ரக்ஷையும் சேவையாகின்றது. கால்களிலும் மச்சங்கள், தேமல்கள் வடுக்கள் மற்றும் காகுத்தன் தன் திருவடியிலும் அதேபோல் நீண்ட திருவிரல்களும் பத்து சந்திரனையொத்த நகங்களும் சேவையாகின்றன. திருக்கரங்களில் கோதண்டம் மற்றும் இராமசரம். மற்ற திருத்தலங்களில் அர்த்தசந்த்ர பாணத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீராமன் இங்கு ராமசரம் எனப்படும் அம்புடன் காட்சிதருகிறார். ஸ்ரீமத் ராமாயணத்தில் இராமசரம் மூன்று இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. காகாசுரன், வாலி மற்றும் இராவணவதத்திற்காக ஸ்ரீராமன் அதைப் ப்ரயோகிக்கிறார். சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கினியானைப் பாடி பரவசமடையலாம்.

தாயார் – சீதாதேவி.

ராமஸ்ய த3யிதா பா4ர்யா நித்யம் ப்ராண ஸமாஹிதா

ஜனகஸ்ய குலே ஜாதா தேவமாயேவ நிர்மிதா

ஸர்வலக்ஷண ஸம்பந்நா நாரீணாம் உத்தமா வதூ:

(ஸம்க்ஷேப ராமாயணம் 26&27)

ஜனகரின் குலத்தில் உதித்தவள், ராமனின் ப்ராணன் போன்றவள், தெய்வங்களின் மாயையால் பிறந்தவள், பெண்களில் சிறந்தவள், ராமனுக்கு மகிழ்ச்சி ஊட்டக்கூடிய காரியங்களையே செய்பவள். தசரதனின் மருமகள் ரோஹிணி சந்திரனை பற்றுவது போல் ராமனைத் தொடர்ந்த வாராரும் முலைமடவாள் வைதேவி!

மாற்றுத்தாய் வனம்போகேயென்றிட* ஈற்றுத்தாய்பின் தொடர்ந்து எம்பிரான் என்றழ * கூற்றுத்தாய் சொல்லக்கொடிய வனம் போன * ராமனைப்பின்பற்றி சென்ற மத்தமாமலர்க்குழலி! கனங்குழையாள் பொருட்டாக் கனை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழுவேற்றுவித்த எழில்தோள் எம்மிராமனின் மைதிலி முகத்தில் தன் நாதனை திரும்ப அடைந்த மகிழ்ச்சி இலங்க கையில் தாமரையுடன் காட்சியளிக்கிறாள். கல்யாணத் திருக்கோலம் என்பதால் சீதையின் புடவையும் எம்பெருமானின் வஸ்திரமும் முடிந்து வைத்த கோலத்தில்தான் எப்பொழுதும் சேவை சாதிக்கிறார்கள்.

ராமனுக்கு இடப்புறத்தில் இலக்குவன்.

)

தம் வ்ரஜந்தம் ப்ரியோ ப்4ராதா லக்ஷ்மணோநு ஜகா3ம ஹ

ஸ்நேஹாத் விநய ஸம்பந்ந ஸுமித்ராநந்த வர்த4ந

”ப்4ராதரம் தயிதோ ப்ராது: ஸௌப்ராத்ரம் அநுதர்சயந்

                (சம்க்ஷேப ராமாயணம் 25)

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்

நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்

புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்

அணையாம் திருமாற்கு அரவு”  (  irandam thiruvandathi     

அத்தகைய அனந்தனே இளையவனாக ராமனின் நிழலாய் இளங்கோவாய் வாளும் வில்லும் கொண்டு பின் தொடர்ந்த நாயகன். வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இருநிலத்தை வேண்டாதே விரைந்து வென்றிமைவாய களிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து வனமே மேவி நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையோடு இராமன் முன்செல்ல ஊனின்றி உறக்கமின்றி பதினான்கு ஆண்டுகள் சேவை செய்த வேதப்புதல்வன் கைகளில் வில்லும் சரமும் ஏந்தி காட்சியளிக்கிறார்.

சீதையின் வலப்புறத்தில் அஞ்சனை மைந்தன்!  வானரோத்தமன்!

ஓதமாகடலைக் கடந்தேறி * உயர்கொள் மாக்கடிகாவையிறுத்து * காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடியிலங்கை மலங்க எரித்து* தூது வந்த வாயுபுத்திரன். எல்லாத் தலங்களிலும் அனுமன் கூப்பிய கையோடு காட்சிதருவார்.  இந்த க்ஷேத்திரத்தில் ராமனின் ஆக்ஞையை ஏற்கும் தோற்றத்தில் தோளில் சார்த்திய கதையோடு சேவை சாதிக்கிறார்.

இந்த அனுமனுக்கு தயிர்சாத நைவேத்தியம் விசேஷம். வரப்ப்ரசாதி. அனுமனுக்கு தயிர்சாத ப்ரார்த்தனை செய்துகொண்டால் ஒரு மண்டல்த்திற்குள் அவர்களின் ப்ரார்த்தனை கைகூடுவது கண்கண்ட உண்மை. இராமனை ஜானகியோடு சேர்த்து வைத்த அனுமன் நம்முடைய ப்ரார்த்தனைகளையும் செவ்வனே நிறைவேற்றி வைக்கிறார். திருமணம் கைகூடாதவர்களும், புத்திரபாக்யம் அற்றவர்களும் இந்த மாருதியை ப்ரார்த்தனை செய்ய மனம் போல் மாங்கல்யம் தான். முன்பு இரட்டைக் கொம்புடைய தேங்காய் இங்கு விசேஷம். இப்போது அந்த ம்ரம் பட்டுப் போய்விட்டது.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்”

உற்சவர்:

ஸ்ரீகோதண்டராமர், சீதாதேவி. வடுவூர் ராமரை ஒத்த திருக்கோலம்.

அருகில் சந்தானகோபாலன். அவரை கையில் எடுத்து

  • ”பதாரவிந்தேந முகாரவிந்தம்
  • முகாரவிந்தேன விநிவேசயந்தம்
  • வடஸ்ய பத்ரஸ்ய புடோ சயாநம்
  • பாலம் முகுந்தம் சிரஸா நமாமி ”

என பாடி ப்ரார்த்திப்போருக்கு புத்திரபாக்யம் கிட்டும்.

 சிறிய திருவடி அனுமன் அருகிருக்க, பெரிய திருவடி கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் சன்னதிக்கு எதிரே காட்சியளிக்கிறார்.  இவருக்கு பஞ்சமியில்  உளுத்தம்பருப்பு மோதகம்(அமிர்தகலசம்) சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தால் ப்ரார்த்தனைகள் கைகூடும் என்பது உறுதி. ராமநவமி உற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உற்சவத்தின் ஆறாம் நாள் ஸ்ரீராம – சீதாதேவி திருக்கல்யாணம் நிகழும்.  ஆலயத்தின் பின் பகுதியில் ராம தீர்த்தமும், தெற்குப் பக்கத்தில் சீதா தீர்த்தமும் வடக்கு திசையில் அனுமார் தீர்த்தமும் உள்ளது.

 ராமர் கோவிலின் வடக்குப்புறத்தில் சிவன் கோவில்.  கிழக்கு நோக்கி காட்சிதரும் ராமனின் முன் மண்டபத்தில் நாம் வடக்கு நோக்கி நின்றோமானால் இருவரையும் ஒருசேர தரிசிக்கலாம்.  சிவன் கோவிலில் நடராஜர் சன்னிதியும் உண்டு. ஆகவே இந்த தலம் ஆதிதில்லை என்றும் அழைக்கப்படுகிறது.

செல்லும்வழி:

நேரடியாக ரயில் வசதியோ பஸ் வசதியோ இல்லை. மன்னார்குடியில் இறங்கி பெருகவாழ்ந்தான் வழியாக முத்துப்பேட்டை சென்று அங்கிருந்து தில்லைவிளாகத்தை பேருந்தின் மூலம் அடையலாம். மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை சாலையில் கோபாலசமுத்திரத்தில் இறங்கி உள்சாலை வழியாக நடந்தோ அல்லது வேறு வாகனங்கள் மூலம் சென்றடையலாம். தங்கும் வசதியோ உணவு வசதியோ இல்லை. முன்பே தகவல் சொன்னால் ததியாராதனத்திற்கு ஏற்பாடு செய்யலாம். சென்னையிலிருந்து திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம் போன்ற இடங்களுக்கு ரயில் வசதி இருப்பதால் அங்கே இறங்கி பின்னர் கார் மூலமாகவும் செல்லலாம். கோவில் நடை திறக்கும் நேரம் காலை 7.00 – 12.00. மாலை 5.00 – 8.00 .

தகவல் தொடர்புக்கு : ஸ்ரீ கோதண்டராம பட்டர்

அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோவில்

தில்லைவிளாகம், திருவாரூர் மாவட்டம் – 614706

தொலைபேசி : 8056856894

ஸ்ரீ சீதா தேவி, ஸ்ரீ லக்ஷ்மண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமசந்திரனுக்கு மங்களம்

 

Advertisements
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to தில்லைவிளாகம் ராமர்( THILLAIVILAGAM RAMAR TEMPLE)

  1. after a long gap I have a deep dharshan with tears

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s